குவைத் மருத்துவமனையில் இந்தியர்களை சந்தித்து நலம் விசாரித்த மத்திய இணை மந்திரி
குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
துபாய்,
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தில் மங்காப் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழர்கள் சிலர் உயிரிழந்திருப்பதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதை மேற்பார்வை செய்யவும், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுக்கவும் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றுள்ளார்.
அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.