அமெரிக்காவில் எம்.எப். ஹுசைனின் ஓவியம் ரூ.119 கோடிக்கு ஏலம்
ஹுசைனின் ‘மறுபிறவி’ என்கிற ஓவியம் கடந்த ஆண்டு லண்டனில் (சுமார் ரூ.25.7 கோடி) விற்கப்பட்டது.;

நியூயார்க்,
'இந்தியாவின் பிகாசோ' என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் எம்.எப். ஹுசைன். மராட்டிய மாநிலத்தில் பிறந்தவரான எம்.எப். ஹுசைன் உலகம் முழுவதும் கலை மற்றும் உரையாடல்களை ஊக்குவிக்கும் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் விரும்பப்பட்ட கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
இவர் கடந்த 1954-ம் ஆண்டு வரைந்த 'கிராம யாத்திரை' என்கிற ஓவியம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் சுறுசுறுப்பை கொண்டாடும் ஹுசைனின் படைப்பாக கருதப்படும் இந்த ஓவியம் 13.8 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.119 கோடி) ஏலம் போனது. ஏலத்தை நடத்திய தனியார் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "ஹுசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு முக்கியமான தருணம். நவீன மற்றும் சமகால தெற்காசிய கலை சந்தையின் அசாதாரணமான வளர்ச்சியை இது குறிக்கிறது" என தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹுசைனின் 'மறுபிறவி' என்கிற ஓவியம் கடந்த ஆண்டு லண்டனில் 3.1 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.25.7 கோடி) விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.