ரஷிய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல்

ரஷிய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-11-18 13:26 GMT

கோப்புப்படம்

கீவ்,

ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 700 பேர் பலியானதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. எனினும் தாக்குதல் குறைந்தபாடில்லை.

கடந்த சில தினங்களாக உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு உக்ரைன் மீது 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. இன்று அதிகாலையிலும் 210 ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் உக்ரைன் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ரஷியாவின் ஏவுகணைகளில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உக்ரைன் வான்பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். ஒரு சில பகுதிகளில் உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. ரஷியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன் மக்கள், உயிருக்கு பயந்து ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில் உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் ரஷிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 89 பேர் காயமடைந்தனர் என்று அவசரநிலைகளுக்கான மாநில சேவை தெரிவித்துள்ளது.

சுமி பிராந்திய ராணுவ நிர்வாகத்தின் தகவல்படி, ஒரு ஏவுகணை மக்கள் வசித்து வந்த ஒன்பது மாடி அடுக்குமாடி கட்டிடத்தைத் தாக்கியது, மற்றொன்று முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்கியது, நகரத்தை மின்சாரம் இல்லாமல் செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்