வெனிசுலா எண்ணெய் விவகாரம்.. டிரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியாவுக்கும் சிக்கல்

வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.;

Update:2025-03-25 13:36 IST
வெனிசுலா எண்ணெய் விவகாரம்.. டிரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியாவுக்கும் சிக்கல்

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாளில் இருந்து கடுமையான வர்த்தக நடைமுறைகளை மேற்கொண்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது வரிவிதிப்பு கொள்கைகளால் உலக அளவில் வர்த்தக போரை ஏற்படுத்தி உள்ளார். உலக அளவில் பங்குச்சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

இந்நிலையில் புதிய உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டிரம்ப். இதுதொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'வெனிசுலா நாடு அமெரிக்காவுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. எனவே வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலா கச்சா எண்ணெய் மீதான கட்டுப்பாடுகள், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்ச்சியாக எண்ணெய் விலையும் உயரலாம்.

அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு காரணமாக சீனா, ஸ்பெயின், இந்தியா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் வெனிசுலா ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த எண்ணெயில் சீனா 68 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வாங்கியுள்ளது அமெரிக்க எரிசக்தித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024-ல் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடாக இருந்தது. 2024 ஜனவரி மாதத்தில் ஒரு நாளைக்கு தோராயமாக 191,600 பீப்பாய்கள் எண்ணெய் இறக்குமதி செய்தது. பிப்ரவரியில் 254,000-க்கும் அதிகமாக உயர்ந்தது. ஜனவரி 2024-ல், வெனிசுலாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியை (ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 557,000 பீப்பாய்கள்) இந்தியா இறக்குமதி செய்திருந்தது.

2024-ல், இந்தியா வெனிசுலாவிலிருந்து 2.2 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது, இது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் 1.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல், இந்தியா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், வெனிசுலாவுடன் இந்தியா எண்ணெய் இறக்குமதிகளை தொடர்ந்தால் கூடுதலாக 25 சதவிகித வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

வெனிசுலாவுக்கு எதிராக வரிவிதிப்பு அறிவித்துள்ள போதிலும், அமெரிக்கா தற்போதும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்