சிரியாவில் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.. கிளர்ச்சியாளர்கள் கொண்டாட்டம்

டமாஸ்கஸ் ​​நகரில் உள்ள மசூதிகளில் பிரார்த்தனை செய்யவும், சதுக்கங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடவும் மக்கள் ஒன்றுகூடினர்.

Update: 2024-12-08 08:41 GMT

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையில், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றன.

கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் மோதல் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியதால் அரசுப் படைகள் பின்வாங்கி தப்பிச் சென்றன. பின்னர் தலைநகரை கிளர்ச்சியாளர்கள் இன்று கைப்பற்றினர். அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைநகரை விட்டு வெளியேறினார். முக்கிய சிறைகளில் இருந்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர்.

இவ்வாறு கிளர்ச்சியாளர்களின் மின்னல் வேக தாக்குதல்களால் சிரியா அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. அத்துடன் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் பஷார் ஆசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் குழு அறிவித்தது. இதுதொடர்பான வீடியோவை சிரிய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. டமாஸ்கசை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சிக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் பேசிய நபர், சுதந்திர சிரிய அரசாங்கத்தின் அரசு நிறுவனங்களை பாதுகாக்கும்படி அனைத்து போராளிகள் குழு மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

டமாஸ்கஸ் நகரில் உள்ள மசூதிகளில் பிரார்த்தனை செய்யவும், சதுக்கங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடவும் மக்கள் ஒன்றுகூடினர். இறைவன் மிகப்பெரியவன் என்று முழக்கம் எழுப்பினர். மக்களில் சிலர் ஆசாத் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி காரின் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர். தெருக்களில் பாதுகாப்புப் படையினரால் விட்டுச் சென்ற ஆயுதங்களை அப்பகுதி சிறுவர்கள் எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டு மகிழ்ந்தனர்.

பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தங்கள் முகாம் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். இந்த களேபரத்திற்கு மத்தியில் ஆளில்லாமல் இருந்த அலுவலகங்கள் சூறையாடப்படுகின்றன. சிலர் ராணுவ அமைச்சக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து பொருட்களை எடுத்துச் சென்றனர். அதிபர் மாளிகைக்குள் மக்கள் நடமாடுவது மற்றும் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்