சிரியாவில் மேலும் ஒரு நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.. ராணுவம் வெளியேறியது

நாட்டின் நான்காவது பெரிய நகரமான ஹமாவை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றியது அதிபர் பஷார் ஆசாத்துக்கு மேலும் பின்னடைவாக இருக்கும்.

Update: 2024-12-05 14:57 GMT

பெய்ரூட்:

சிரியாவில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அரசுப் படைகளின் வசம் உள்ள பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சிப் படைகள் முன்னேறி வருகின்றன. சமீபத்தில் தொடர் தாக்குதலுக்குபிறகு வர்த்தக மையமான அலெப்போ நகரை கிளர்ச்சி படை கைப்பற்றியது.

இந்த தாக்குதலை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் சிரிய தேசிய ராணுவம் எனப்படும் துருக்கி ஆதரவு போராளிகள் குழுவும் வழிநடத்துகின்றன. இந்த குழுவினரின் திடீர் தாக்குதலால் சிரிய ராணுவம் நிலைகுலைந்துள்ளது.

2016-ல் அலெப்போ நகரம் கிளர்ச்சிப் படைகள் வசம் இருந்தது. அப்போது, சிரியா அரசுக்கு ஆதரவாக உள்ள ரஷியா, அதிரடியாக வான் தாக்குதல் நடத்தி அந்த நகரத்தை மீட்டு கொடுத்தது. ரஷியா, ஈரான் மற்றும் ஈரானின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மற்றும் பிற போராளிக் குழுக்கள் தலையிட்டு, ஆசாத்தின் அரசுக்கு ஆதரவாக இருந்தன. இதனால் அசாத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கிறார். அதன்பின்னர் முதல் முறையாக கிளர்ச்சிப் படைகள் தாக்குதல் நடத்தி அலெப்போவை கைப்பற்றியிருக்கிறது.

அலெப்போவைத் தொடர்ந்து இத்லிப் நகரை குறிவைத்து கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசு படைகளின் வசமுள்ள டமாஸ்கஸ் நகரையும் குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஹமா நகருக்குள் கிளர்ச்சிப் படைகள் நுழைந்து, ராணுவத்தின் பாதுகாப்பு அரணை உடைத்து முன்னேறினர். நகருக்குள் நுழைந்துவிட்டதாக கிளர்ச்சிப் படைகள் அறிவித்ததையடுத்து, ஹமா நகரில் இருந்த ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். அவர்கள் பின்வாங்கி ஹமா நகருக்கு வெளியில் உள்ள மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல நாட்கள் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போரிட்டதில் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் நகரின் பாதுகாப்புகளை உடைக்க தற்கொலை தாக்குதல்களை நம்பி உள்ளனர் என்றும் ராணுவம் கூறியது.

நான்காவது பெரிய நகரமான ஹமாவை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றியது அதிபர் பஷார் ஆசாத்துக்கு மேலும் பின்னடைவாக இருக்கும்.

அடுத்து கிளர்ச்சிப் படைகள்  நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ் நகரை கைப்பற்றுவதற்காக முன்னேறலாம். இந்த நகரம் ஹமாவிலிருந்து தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இவ்வாறு கிளர்ச்சிப் படைகளின் கை ஓங்கி வரும் நிலையில், சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா களமிறங்கி உள்ளது. கிளர்ச்சி படைகளை குறிவைத்து வான் தாக்குதலை நடத்தி முக்கிய கட்டமைப்புகளை தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்