சிரியா நெருக்கடி: ரஷியாவில் தஞ்சம் புகுந்த ஆசாத்...?

சிரியாவில் இருந்து தப்பியோடிய ஆசாத் மற்றும் அவருடைய குடுமபத்தினர் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கிரெம்ளின் மாளிகை வட்டாரம் தெரிவிக்கின்றது.

Update: 2024-12-08 22:47 GMT

மாஸ்கோ,

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு இரு தசாப்தங்களாக நடந்து வந்த சூழலில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து, ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறினர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர்.

இந்த சூழலில் டமாஸ்கஸ் நகரையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால், பாதுகாப்பு தேடி அதிபர் ஆசாத் டமாஸ்கஸில் இருந்து வெளியேறி விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆசாத் என்ன ஆனார் என்ற விவரம் சரிவர வெளியிடப்படாமல் இருந்தது.

சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து தப்பியோடிய ஆசாத் மற்றும் அவருடைய குடுமபத்தினர் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கிரெம்ளின் மாளிகை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இதுபற்றி ரஷிய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஆசாத் மற்றும் அவருடைய குடுமபத்தினர் மாஸ்கோ நகருக்கு வந்துள்ளனர். ரஷியா மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. சிரியாவில் ஏற்பட்டு உள்ள நெருக்கடிக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என எப்போதும் ரஷியா கூறி வருகிறது.

ஐ.நா. மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என ரஷிய அரசின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்