இலங்கை அதிபர் அடுத்த மாதம் இந்தியா வருகை
இலங்கை அதிபர் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிபெற்று அதிபரானார்.
இதனிடையே, இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில், அதிபர் அனுரா குமார திசநாயகாவின் கட்சி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரியா பதவியேற்றார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகா அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார். இந்திய அரசின் அழைப்பை ஏற்று அதிபர் அனுரா குமார திசநாயகா டிசம்பர் மாதம் இந்தியா செல்ல உள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜிதா ஹரத் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது மெல்ல மீண்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.