சிங்கப்பூரில் சரக்கு கப்பல் மீது டிரெட்ஜர் மோதியது.. கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரம்

எண்ணெய் படலத்தை அகற்றி கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியில் சுமார் 250 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-06-17 06:25 GMT

சிங்கப்பூர்,

சிங்கப்பூரின் சென்டோசா தீவு கடற்பகுதியில் மரைன் ஹானர் என்ற சரக்கு கப்பல் நின்று கொண்டிருந்தது. இது சிங்கப்பூரின் எரிபொருள் வினியோக கப்பல் ஆகும். இந்தநிலையில் நெதர்லாந்து நாட்டின் வோக்ஸ் மாக்சிமா என்ற தூர்வாரும் கப்பல் (டிரெட்ஜர்) அந்த வழியாக சென்றது. அப்போது நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது நெதர்லாந்து கப்பல் மோதியது. இதில் அந்த கப்பலின் எண்ணெய் டேங்கர் சேதம் அடைந்தது.

சேதம் அடைந்த பகுதி வழியாக எண்ணெய் வெளியேறி கடலில் பரவியது. இதனால் பிரபல சுற்றுலா தலமான சென்டோசா கடற்கரை எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அங்கு ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. எனவே அந்த எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமையன்று இந்த விபத்து நடந்துள்ளது.

டேங்கரில் ஏற்பட்ட உடைப்பு விரைவில் சரிசெய்யப்பட்டு, எண்ணெய் கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், கடலில் கலந்த எண்ணெய் படலம் அலைகளால் கரையோரத்திற்கு அடித்து வரப்படுகின்றன. இதனால் சென்டோசா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எண்ணெய் படலத்தை அகற்றி கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியில் சுமார் 250 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய் மேலும் கடற்கரைகளில் பரவாமல் தடுப்பதற்காக 1.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதவை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1.6 கிலோமீட்டர் தூரத்திற்கு தற்காலிக தடைகள் அமைக்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தூர்வாரும் கப்பல் 'வோக்ஸ் மாக்சிமா'

 

இதுதவிர, அருகில் உள்ள பூங்காவில் சதுப்புநிலங்களைப் பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக தேசிய பூங்கா வாரியம் சார்பில் எண்ணெய் உறிஞ்சும் மிதவைகள் பயன்படுத்தப்பட்டன. உதவி செய்ய முன்வந்த தன்னார்வலர்கள் பூங்காவில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் படலங்களின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக இவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

எண்ணெய் கசிவால் கடற்பரப்பில் ஏற்பட்ட சேதம் மற்றும் வனவிலங்குகள் பாதிப்பை இயற்கை பாதுகாவலர்கள் மற்றும் உயிரியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்