'ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும்' - இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் கருத்து

ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் இயார் லிபிட் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-26 14:19 GMT
Image Courtesy : AFP

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த 1-ந்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது.

இருப்பினும் இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பின் மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. அதே சமயம், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், ஈரானின் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகே உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என ஈரான் கூறியுள்ளது. அதேசமயம், 2 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் இயார் லிபிட் தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரானில் மூலோபாய மற்றும் பொருளாதார இலக்குகளை தாக்கக்கூடாது என்ற முடிவு தவறானது. நாம் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும்.

இஸ்ரேல் விமானப் படையின் நடவடிக்கைகள் அதன் செயல்பாட்டுத் திறனைக் காட்டியது. இஸ்ரேலின் எதிரிகள் நமது ராணுவம் வலிமையானது என்பதையும், நம்மால் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த முடியும் என்பதையும் அறிந்திருப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்