அமெரிக்காவில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு
எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு ராகுல்காந்தியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும்.;
வாஷிங்டன்,
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் டல்லாசில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர். அடுத்த நாள் வாஷிங்டனில் சிந்தனையாளர்கள், தேசிய பத்திரிகையாளர்கள் மன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், அமெரிக்கா வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் டல்லாசில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அயலக காங்கிரஸ் உறுப்பினர்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் ஈடுபட ஆவலுடன் இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா பயணம் மேற்கொண்டு உள்ளார்.