இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளும், 5,347 காளையர்களும் பதிவு செய்துள்ளனர் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர், பழைய துணி உள்ளிட்ட இதர பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிப்பதைத் தவிர்த்து அவற்றை தனியாகச் சேகரித்து குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளது.
புதிய வகை வைரஸ் (HMPV)நோய் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. நோய் குறித்து சந்தேகம் இருப்பின் 9342330053 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தல் எனும் இடத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்தநிலையில் நினைவிடம் அமைக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா நன்றி கூறியுள்ளார்.
குஜராத்தில் கச் மாவட்டத்தில் கந்திராய் கிராமத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்த 18 வயது இளம்பெண் 33 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் டோக்கன் முன்பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க 8,000 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 10,000 க்கும் மேற்பட்ட காளைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும் தொடங்கி உள்ளோம் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மணிஷ் கூறியுள்ளார்.
மது இல்லாமல் திருமணங்கள் நடத்தினால் 21,000 ரூபாய் வெகுமதி
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் பல்லோ கிராமத்தில், மது விருந்து இல்லாமலோ, டி.ஜே. மியூசிக் கச்சேரி இல்லாமலோ திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் அந்த குடும்பங்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என பஞ்சாயத்து அறிவித்துள்ளது.
திருமண விழாக்களில் வீண் செலவுளை தவிர்க்கவும், மது அருந்துவதைத் தடுக்கவும் கிராம மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பல்லோ கிராம பஞ்சாயத்து தலைவர் அமர்ஜித் கவுர் தெரிவித்தார்.
மோடி இலங்கை பயணம்
இந்திய பிரதமர் மோடி இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தர உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஆனால் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது
துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த கார், டிராக்கின் ஓரத்தில் உள்ள தடுப்பில் மோதி சேதமடைந்தது. இந்த விபத்தில் நடிகர் அஜித் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.