5 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
சீன அதிபருடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாஸ்கோ,
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும். மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றுள்ளனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் கலந்துரையாடுகின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். அங்கு ஈரான் அதிபர், ஐக்கிய அரசு அமீரக அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அந்த வகையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு(LAC) பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் ராணுவங்கள் ரோந்து செல்வது தொடர்பான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவத்திற்கு பிறகு கிழக்கு லடாக்கில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் 4 ஆண்டுகளாக நீடித்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் ஷி ஜின்பிங்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆகும். எனவே, இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபர் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு வருகை தந்தபோது இருவருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு நவம்பர் 2022-ல் ஜி20 தலைவர்களுக்கு இந்தோனேசிய அதிபர் வழங்கிய விருந்து நிகழ்ச்சியின்போதும், ஆகஸ்ட் 2023-ல் ஜோகனஸ்பெர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போதும் பிரதமர் மோடி மற்றும் ஷி ஜின்பிங் இடையே சிறிய அளவிலான உரையாடல்கள் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு குறித்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 5 ஆண்டுகளுக்கு பிறகு முறைப்படி நாம் சந்திப்பது இதுவே முதல்முறை. இருநாட்டு மக்களும், சர்வதேச சமூகமும் நமது சந்திப்பு குறித்து மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. இரண்டு நாடுகளும் பழமையான நாகரீகம் கொண்ட நாடுகள். இந்த சந்திப்பு நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேச்சுகையில், "5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரு நாட்டின் தலைவர்களும் முறையான சந்திப்பை நடத்தி இருக்கிறோம். இந்தியா-சீனா இடையிலான உறவு இருநாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் மிகவும் முக்கியமானது என நாங்கள் நம்புகிறோம். தற்போது இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. நமது உறவுகளில் பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை ஆகியவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து, பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
"உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்திய-சீன உறவுகள் மிக முக்கியம். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை இருதரப்பு உறவுகளை வழி நடத்தும்" என பதிவிட்டுள்ளார்.