வங்காளதேசத்தில் இடைக்கால அரசுக்கு தலைமையேற்றுள்ள முகமது யூனுசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக முகமது யூனுஸ் இன்று பதவியேற்று கொண்டார்.

Update: 2024-08-08 16:32 GMT

புதுடெல்லி,

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, பதவியை ராஜினாமா செய்து விட்டு, டாக்காவில் இருந்து சகோதரியுடன் ஹசீனா வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.

ஹசீனா ராஜினாமா செய்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் முகமது சஹாபுதீன் பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரீஸ் சென்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை ஏற்க இன்று மதியம் நாடு திரும்பினார். யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கும் என வங்காளதேச ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்திருந்தார்.

அதன்படி இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக பேராசிரியர் முகமது யூனுஸ் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் முகமது யூனுசுக்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள பேராசிரியர் முகமது யூனுசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, விரைவில் வங்காளதேசம் இயல்புநிலைக்கு திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நமது இரு நாட்டு மக்களின் பகிரப்பட்ட நம்பிக்கைகளை நிறைவேற்ற வங்காளதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்