இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை: மாலத்தீவு முடிவு
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்லாமிய நாடான மாலத்தீவு கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மாலே,
சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற நாடான மாலத்தீவில் இஸ்ரேலியர்கள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவில் நடக்கும் போரால் இஸ்ரேலின் மீது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாலத்தீவின் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக காட்ட வேண்டும் என மாலத்தீவு எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் அதிபர் முகமது முயிசுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாலத்தீவு உள்துறை மந்திரி அலி இஹுசன்,"இஸ்ரேலிய பாஸ்போர்ட் பயன்படுத்தி மாலத்தீவுக்கு வருபவர்களைத் தடுக்க விரைவில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது" என்று அறிவித்தார்.
மாலத்தீவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில், மாலத்தீவில் இஸ்ரேலிய மக்கள் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள லட்சத்தீவு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.