லெபனானை கடுமையாக தாக்கிய இஸ்ரேல்; புகைப்பட தொகுப்பு வெளியீடு
லெபனானின் மத்திய பெய்ரூட் நகரின் அல்-பச்சவுரா பகுதியில் நடந்த தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர் என லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.;
பெய்ரூட்,
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைய உள்ள சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இடையேயான மோதல் அதிகரித்து வரும் சூழலில், லெபனானின் பெய்ரூட் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் பல கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.
இதேபோன்று, மத்திய பெய்ரூட்டின் அல்-பச்சவுரா பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுக்கான மையம் மீது இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெரிய அளவில் தீ பரவியது. இதனால், கட்டிடத்தில் இருந்து அதிக அளவில் கரும்புகை விண்ணை நோக்கி எழுந்தது.
இந்த வான்வழி தாக்குதலில், அருகேயுள்ள வீடுகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. சம்பவ பகுதியில் மீட்பு பணியை மேற்கொள்ள ஆம்புலன்சுகள் மற்றும் போலீஸ் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.
அல்-பச்சவுரா பகுதியில் நடந்த தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர் என லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு முன், ஹரெத் ஹிரீக் பகுதியில் வான்வழியே 3 கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதுபற்றிய புகைப்பட தொகுப்பை காணலாம்:
1. இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் கட்டிடம் ஒன்றில் இருந்து வான்வரை புகை எழுந்தது.
2. பெய்ரூட் நகரின் மத்திய பகுதியில் பச்சவுரா நகரில் நடந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று சேதமடைந்து உள்ளது.
3. இஸ்ரேல் தாக்குதலில் பச்சவுரா நகரில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதை காணலாம்.
4. இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பச்சவுரா நகரில் சேதமடைந்த கட்டிடங்களின் ஒரு பகுதி
5. இஸ்ரேல் தாக்குதலில் பெய்ரூட் நகரின் பச்சவுரா நகரில் சேதமடைந்த கட்டிட பகுதியை ஒருவர் தூரத்தில் நின்றபடி பார்க்கிறார்.
6. பெய்ரூட் நகரில் இரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சேதம் அடைந்த கட்டிடங்களில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சி
7. பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தீ பரவியது.
8. இஸ்ரேல் படையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, ஸ்கைபார் என்ற கிளப்பில் தஞ்சம் அடைந்துள்ள புலம்பெயர் மக்கள் பதறியபடி நடமாடும் காட்சி