அமெரிக்க டாலரை பலவீனப்படுத்த இந்தியா முயற்சியா...? டிரம்புக்கு பதிலளித்த ஜெய்சங்கர்

அமெரிக்க டாலரை பலவீனப்படுத்துவதில் இந்தியாவுக்கு ஆர்வமில்லை என மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Update: 2024-12-07 19:33 GMT

தோஹா,

கத்தார் நாட்டில் 22-வது தோஹா மாநாடு நடந்தது. இதில், இந்தியா சார்பில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதேபோன்று, கத்தார் வெளியுறவு துறை மந்திரி ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் பின் ஜஸ்ஸிம் அல் தானி மற்றும் நார்வே வெளியுறவு துறை மந்திரி எஸ்பன் பார்த் ஐட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப், சமீபத்தில் பேசும்போது, பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தும் வகையில் பேசினார். பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனியாக கரன்சி நோட்டுகள் அறிமுகம் என்று வெளிவந்த செய்தி பற்றி பேசும்போது, அவர் இதனை குறிப்பிட்டார். இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் இதுபற்றி கூறும்போது, டிரம்பின் முதல் நிர்வாகத்தின்போது, அமெரிக்காவுடன் நாங்கள் நல்ல, வலுவான உறவை கொண்டிருந்தோம்.

சில பிணக்குகள் உள்ளன. அவை, வர்த்தகம் சார்ந்தவையாக உள்ளன. ஆனால், டிரம்ப் அதிகாரத்தின் கீழ்தான் குவாட் அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டது என நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன் என்றார். பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் இடையேயான தனிப்பட்ட நட்புறவை குறிப்பிட்ட அவர், அது இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான இருதரப்பு உறவுக்கு பங்காற்றியது என்றார்.

இந்தியா ஒருபோதும் டாலரின் மதிப்பை பலவீனப்படுத்தியதில்லை என நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். பிரிக்ஸ் கரன்சிக்காக எந்தவித முன்மொழிவும் இதுவரை இல்லை. நிதி பரிமாற்ற விசயங்களை பற்றியே பிரிக்ஸில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, எங்களுடைய மிக பெரிய வர்த்தக நட்பு நாடு. டாலரை பலவீனப்படுத்த எங்களுக்கு ஆர்வம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த பயணத்தின்போது, கத்தாரின் பிரதமர் மற்றும் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரியான ஷேக் முகமதுவை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை தொடர்ந்து வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் ஆகியவை பற்றி ஆக்கப்பூர்வ ஆலோசனைகளையும் மந்திரி ஜெய்சங்கர் மேற்கொண்டார். இதனையடுத்து அவர் பஹ்ரைன் நாட்டுக்கு செல்ல இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்