'நான் அதிபராக இருந்திருந்தால் அக்டோபர் 7 தாக்குதல் நிகழ்ந்திருக்காது' - டிரம்ப்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.;
வாஷிங்டன்,
காசாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவப்படை அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இதற்கிடையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரலிய பணய கைதிகள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 101 பேர் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓராண்டுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம் 5-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், தெற்கு புளோரிடாவில் நடைபெற்ற, ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தோருக்கான இரங்கல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கர தாக்குதலை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நான் அமெரிக்காவின் அதிபராக பதவியில் இருந்திருந்தால் அக்டோபர் 7 தாக்குதல் நிச்சயம் நிகழ்ந்திருக்காது" என்று தெரிவித்தார்.