'தொழில்நுட்ப கோளாறு விரைவில் சீராகும் என நம்புகிறோம்' - மைக்ரோசாப்ட் நிறுவனம்

தொழில்நுட்ப கோளாறு விரைவில் சீராகும் என நம்புகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Update: 2024-07-19 10:15 GMT

வாஷிங்டன்,

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகம் முழுவதும் இன்று முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களின் கம்ப்யூட்டர் திரையில் புளூ ஸ்கிரீன் ஆப் டெத் (Blue Screen of Death) என்ற எரர் தோன்றியது. அதில், 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக, விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன. இந்தியாவில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விண்டோஸ் செயல்படாததால் விமானங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரவுட்ஸ்டிரைக் (Crowdstrike) அப்டேட்டில் ஏற்பட்ட குழப்பமே இந்த சிக்கலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு விரைவில் சீராகும் என நம்புகிறோம் என மைக்ரோசப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதனை விரையில் சீரமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்