போப் பிரான்சிஸ் 5 வார சிகிச்சைக்கு பின்பு டிஸ்சார்ஜ்

நிம்மோனியா பாதிப்பால் ஜெம்மெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.;

Update:2025-03-23 18:03 IST
போப் பிரான்சிஸ் 5 வார சிகிச்சைக்கு பின்பு டிஸ்சார்ஜ்

கோப்புப்படம்

வாடிகன் நகரம்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வரும் போப் பிரான்சிஸ் (வயது 88), கடந்த பிப்ரவரி 14-ந்தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெற்றார். வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்புகளால் போப் அவதிப்பட்டு வருகிறார் என்றும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில், அவருக்கு சுவாச குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளது என்றும் வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறினார்.

எனினும் போப் அவராகவே எழுந்து, காபி சாப்பிடுவது, உணவை எடுத்து கொள்வது, பத்திரிகை வாசிப்பது உள்பட சில அன்றாட பணிகளை செய்து வருகிறார். அவருடைய நிலைமை சீராக உள்ளது என்று புரூனி கூறினார். இதனால், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் பலர் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டனர்.

தொடர்ந்து 5 வாரங்களாக சிகிச்சையில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறியுள்ளார். பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் இருந்து வரும் அவர் மருத்துவமனையின் பால்கனியில் இருந்து, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.

அவரை பார்க்க கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடி புன்னகையையும் வெளிப்படுத்தினார். தளர்வாக காணப்பட்ட அவர், பெண் ஒருவரை நோக்கி, நான் மஞ்சள் பூக்களை வைத்திருக்கும் இந்த பெண்ணை பார்க்கிறேன் என கூறினார். அவர் தளர்வாகவே, சிலுவை அடையாளம் காட்டி விட்டு, சக்கர நாற்காலியில் மருத்துவமனையின் உள்ளே சென்று விட்டார்.

போப்பின் டாக்டர்களில் ஒருவரான செர்கியோ ஆல்பைரி கூறும்போது, போப் இயல்பு நிலைக்கு திரும்ப 2 மாத கால அளவு ஆகும். அவர் வீட்டில் இருந்தபடி தொடர்ந்து, உடல்நலம் தேறி வருவார். ஏனெனில், ஒருவர் குணமடைவதற்கு மோசம் வாய்ந்த இடம் என்றால் அது மருத்துவமனைதான். இதில் ஒருவருக்கு பல்வேறு தொற்றுகள் ஏற்பட கூடிய ஆபத்து நிறைந்த சூழல் உள்ளது என கூறியுள்ளார்.

போப் சிகிச்சையின்போது, 2 முறை சிக்கலான நிலைக்கு சென்றார். எனினும், தொடர்ந்து சுயநினைவுடனேயே அவர் காணப்பட்டார் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த சூழலில், நிம்மோனியா பாதிப்பால் ஜெம்மெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். இதன்பின்னர், அவர் வாடிகனுக்கு செல்வார்.

Tags:    

மேலும் செய்திகள்