வங்காளதேசத்தில் இந்து கோவில் மீது தாக்குதல்; சிலைகள் தீயில் எரிந்து சேதம்
இஸ்கான் முன்னாள் துறவி சின்மய் கிருஷ்ண தாஸ் கடந்த மாதம் நவ-25 ம் தேதி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
டாக்கா,
வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. பல இடங்களில் மாணவர்களுக்கும். ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த வன்முறை போராட்டங்களில் மாணவர்கள், காவல்துறையினர். அப்பாவி பொதுமக்கள் என ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பிரதமரின் இல்லத்தை போராட்டக்குழுவினர் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் உருவானது.
அசாதாரண சூழல் நிலவியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்காளதேசத்தில் அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்ததையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.இடைக்கால அரசு பொறுப்பேற்றபிறகு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. சமீபத்தில் இந்து அமைப்பின் தலைவரும், இஸ்கான் முன்னாள் துறவியுமான சின்மய் கிருஷ்ண தாஸ் கடந்த மாதம் நவ-25 ம் தேதி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட ராமன் ராய் என்ற வழக்கறிஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரமன் தாஸ் தெரிவித்திருந்தார். சின்மோய் கிருஷ்ண தாசுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருக்கும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்காளதேச அரசிடம் இஸ்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரமன் தாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் நம்ஹட்டா பகுதியில் இஸ்கான் மையம் அமைந்துள்ளது. இந்த மையம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் இருந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த ஸ்ரீ லஷ்மி நாராயண் உள்ளிட்ட கடவுள் சிலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் கோவில் முழுவதும் சேதமாகியுள்ளது. சனிக்கிழமை(07.12.2024) அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் இந்த கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். டாக்கா மாவட்டம் துராக் போலீஸ் சரகத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. கோயிலின் கூரை மீது பெட்ரோல் அல்லது ஆக்டேனை ஊற்றி மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதுதொடர்பாக வங்கதேசத்தில் உள்ள அரசிடம் இஸ்கான் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசாரும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.