டிரம்புடன் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் சந்திப்பு
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுகர்பெர்க்கை சந்தித்து பேசினார்.;
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அதிபராக தேர்வு ஆகியிருக்கும் டிரம்ப் தற்போது, தனது அமைச்சரவையில் இடம்பெறுபவர்களை அறிவித்து வருகிறார். அதேபோல, அமெரிக்க தொழில் அதிபர்களையும் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் சந்தித்து பேசினார். இதுகுறித்து ஜனாதிபதியின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், மார்க் ஜுக்கர்பெர்க் டிரம்பின் பொருளாதார திட்டங்களை ஆதரிக்க விரும்புகிறார். எனவே தனது உறவை புதுப்பிக்கும் வகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது என கூறினார். முன்னதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கும் மார்-ஏ-லாகோவில் டிரம்பை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.