20 ஆண்டுகளுக்கு பின்பு விடுதலை; கொலையான நபரின் வீடு முன் பட்டாசு, விருந்து வைத்து கைதி கொண்டாட்டம்

சீனாவில் ஜியாங்கின் தந்தையை படுக்கையறையில் வைத்து தாக்கி, கொலை செய்த பின்னர், அவருடைய உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து, தடயங்களை அழித்துள்ளனர்.;

Update:2024-11-26 22:06 IST

பீஜிங்,

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மியான்யாங் நகரில் வசித்து வருபவர் ஜியாங். இவர், டாயின் என்ற அந்நாட்டின் சமூக ஊடகத்தில் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு உள்ளார். அதில், இவருடைய தந்தையை படுகொலை செய்த நபர், இவரின் வீட்டின் முன் விருந்து வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்கிறார்.

அதுபற்றிய வீடியோவை வலைதளத்தில், ஜியாங் பகிர்ந்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஜியாங்கின் தந்தை படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இவருடைய அண்டை வீட்டுக்காரர் 3 பேரை கூலிக்கு அமர்த்தி இந்த கொலையை செய்து இருக்கிறார்.

அப்போது, ஜியாங்கின் தந்தைக்கு 39 வயது. அவரை படுக்கையறையில் வைத்து தாக்கி, கொலை செய்த பின்னர், அவருடைய உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து, தடயங்களை அழித்துள்ளனர்.

இதன் பின்பும், அவரின் குடும்பத்துக்கு அச்சுறுத்தல் தொடர்ந்துள்ளது. அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இவரின் தந்தையின் உறவினர்களுக்கும், குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப சண்டையில் மத்தியஸ்தம் செய்ய ஜியாங்கின் தந்தை சென்றிருக்கிறார்.

இதில், கொலை குற்றவாளிக்கு ஆத்திரம் ஏற்பட்டதில் இந்த படுகொலை நடந்துள்ளது என ஜியாங் கூறியுள்ளார். குற்றவாளிகள் 4 பேரில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேறியது. முக்கிய குற்றவாளி மற்றும் மற்றொரு நபர் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதன்பின்னர், அதுவும் குறைக்கப்பட்டு, குற்றவாளி 20 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து, விடுதலையாகி உள்ளார். அந்த நபர் விடுதலை ஆகிறார் என தெரிந்ததும், ஷென்ஜென் பகுதியில் பணியாற்றி வரும் ஜியாங், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அதற்கு அடுத்த நாள், ஜியாங்கின் வீடு முன்பு சிவப்பு கம்பளம் விரித்து, பட்டாசு வெடித்து, 18 வகையான உணவுகளை வைத்து, அந்த குற்றவாளி விருந்து வைத்து இருக்கிறார்.

இதுபற்றி ஜியாங் கூறும்போது, கொலை குற்றவாளியுடன் நான் பேச முடிந்தால், 2 குடும்பங்களுக்கும் இதுபோன்ற வலியை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறார்? என புரிந்து கொள்ள முயற்சிப்பேன் என தெரிவித்து உள்ளார். உள்ளூர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து தலையிடும் வரை விருந்து, கொண்டாட்டம் தொடர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்