கமலாவுடன் மீண்டும் விவாதமா..? - டிரம்ப் சொன்ன பதில்

டொனால்டு டிரம்ப்புடன் இன்னொரு விவாதம் நடத்த தயாராக இருப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

Update: 2024-09-13 11:11 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. பின்னர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.

அதனை தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ்(59) அறிவிக்கபட்டார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இருவரும் பங்கேற்ற நேரடி விவாத நிகழ்ச்சி பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் நடைபெற்றது. இதில் பொருளாதாரம், குடியேற்றம், ரஷியா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர், நிர்வாகம், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசாரமாக விவாதித்தனர்.

இந்த நேரடி விவாதத்தில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் டிரம்பை, கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளினார். பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் கமலா ஹாரிஸ் விவாதத்தில் வெற்றி பெற்றதாக கூறுகின்றன.

இந்நிலையில் வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, டிரம்ப்புடன் இன்னொரு விவாதம் நடத்த தயாராக இருப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அதே சமயம், அரிசோனாவில் தேர்தல் பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இன்னொரு விவாதத்திற்கான அவசியம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை" என்று குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு போட்டியில் தோல்வியடைந்தவர் கூறும் முதல் வார்த்தைகள், 'எனக்கு இன்னொரு போட்டி வேண்டும்' என்பதே ஆகும். ஜனநாயக கட்சியின் தீவிர இடதுசாரி வேட்பாளரான தோழர் கமலாவுக்கு எதிரான விவாதத்தில் நான் வெற்றி பெற்றதாக கருத்துக்கணிப்புகள் தெளிவாக கூறுகின்றன. இதனால் அவர் இன்னொரு விவாதம் வேண்டும் என்று கேட்கிறார். மீண்டும் ஒரு விவாதம் நடைபெறாது" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்