கனடா: பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏரியில் மூழ்கி தெலுங்கானா மாணவர் பலி

கனடாவில் ஏரியில் மூழ்கி பலியான பிரணீத்தின் உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளிடம் அவருடைய தந்தை கேட்டு கொண்டுள்ளார்.;

Update:2024-09-17 02:56 IST

டொரண்டோ,

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரணீத். 2019-ம் ஆண்டு முதல் கனடா நாட்டில் தங்கி படித்து வந்த இவர், சமீபத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். கனடாவில் வேலை தேடியும் வந்திருக்கிறார்.

2022-ம் ஆண்டில் இவருடைய அண்ணன் கனடாவுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, பிரணீத்தின் அண்ணனின் பிறந்த நாளை கொண்டாடும் நோக்கில், இந்த இரு சகோதரர்களும் அவர்களுடைய நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஏரியில் குதித்து நீந்தி மகிழ்ந்தனர்.

இதன் பின்னர் அவர்கள் கரையேறினர். ஆனால், பிரணீத் ஏரியில் இருந்து வெளியே வரவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் ஏரியில் தேடினர். இதில், நீரில் மூழ்கி உயிரிழந்த பிரணீத்தின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் பற்றி அவருடைய குடும்பத்தினரிடம் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருடைய உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளை பிரணீத்தின் தந்தை கேட்டு கொண்டுள்ளார்.

நடப்பு ஆண்டில் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பது அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில வாரங்களுக்கு முன், 2 இந்திய மாணவர்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த ஜூலையில் நியூயார்க் நகரில் பார்பர்வில்லே நீர்வீழ்ச்சியில் குளித்தபோது, இந்திய மாணவர் ஒருவர் பலியானார்.

Tags:    

மேலும் செய்திகள்