ஏ.ஐ. பேஷன் ஷோவில் பைடன், கமலா ஹாரிசுக்கு அவதூறு...? எலான் மஸ்க் வீடியோவால் சர்ச்சை

டெஸ்லா மற்றும் எக்ஸ் ஆகியவற்றை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்தபடி ஒரு சூப்பர் ஹீரோ போன்று எலான் மஸ்க் நடந்து வருகிறார்.

Update: 2024-07-22 07:41 GMT

நியூயார்க்,

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் தாக்கம் சமூகத்தில் பரவலாக அதிகரித்து வருகிறது. எனினும், இதில் சில தீமைகளும் காணப்படுகின்றன. பிரபலங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலியான புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கம் உள்ளிட்ட விசயங்களும் நடைபெறுகின்றன.

இந்த சூழலில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் எக்ஸ் சமூக ஊடக தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், வீடியோ ஒன்றையும் இணைத்து உள்ளார்.

செயற்கை நுண்ணறிவு பேஷன் ஷோவுக்கான நேரமிது என்ற தலைப்பிட்டு மஸ்க் வெளியிட்ட அந்த வீடியோவில், நவநாகரீக கண்காட்சி (பேஷன் ஷோ) ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அதில், பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் பைடன், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா, ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் நடந்து வருகின்றனர்.

இதில், பிரதமர் மோடி வெள்ளை நிறத்தில் காலணிகளை அணிந்தபடி, பல நவீன உருவங்கள் ஒன்றிணைந்த, நீண்ட அங்கி போன்ற உடை ஒன்றை அணிந்தபடி நடந்து வருகிறார். ரஷிய அதிபர் புதின், லூயிஸ் உயிட்டன் உடை அணிந்தபடியும், பைடன் சக்கர நாற்காலியிலும் வரும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

டெஸ்லா மற்றும் எக்ஸ் ஆகியவற்றை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்தபடி ஒரு சூப்பர் ஹீரோ போன்று மஸ்க் நடந்து வருகிறார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தங்க நெக்லஸ் அணிந்தபடி நடந்து வருகிறார்.

இதுதவிர, பிற துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்த பேஷன் ஷோவில் நடந்து வரும் காட்சிகள் உள்ளன. டிரம்புக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து உள்ள மஸ்க், அவருடைய தேர்தல் பிரசார பணிகளுக்காக பெரும் தொகையை நிதியுதவியாக வழங்கவும் முன்வந்துள்ளார்.

எனினும், அதிபர் பைடன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வருவது போன்று காட்சியை வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று, டிரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஆபாச காட்சியில் இடம் பெற்றிருப்பது போல் ஹாரிசை வீடியோவில் காட்டியிருப்பது, மஸ்க்கின் விரோத போக்கிற்கான வக்கிர மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளது என்றும் நெட்டிசன்களால் பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்