வங்காளதேசம்: ஹசீனா அரசு கவிழ்ந்த பின்னர் இந்து கோவிலுக்கு காவலாக நின்ற முஸ்லிம்கள்

வங்காளதேசத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தகேஸ்வரி இந்து கோவில் மத மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.

Update: 2024-08-24 09:42 GMT

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த ஜூலையில் இருந்து அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் சர்ச்சைக்குரிய விவகாரம் வன்முறையாக வெடித்தது.

இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில், 300 பேர் வரை பலியானார்கள். இதில், கடந்த 5-ந்தேதி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகினார். அவர், பாதுகாப்புக்காக டாக்கா அரண்மனையை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்து தஞ்சமடைந்து உள்ளார். இதன்பின்பும் போராட்டம் தீவிரமடைந்து, பலர் உயிரிழந்தனர். மொத்தத்தில் வன்முறைக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

 

ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்ததும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் பரவின என ஒருபுறம் தகவல் பரவியது. இதனால், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், அந்நாட்டின் டாக்கா நகரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தகேஸ்வரி கோவில் ஒன்று உள்ளது.

'அனைத்து மனிதர்களுக்கும் அன்னை' என்ற பெயர் பெற்ற இந்த கோவிலுக்கு இந்து சமூக உறுப்பினர்கள் பலர் வருகை தருவது வழக்கம். இதன் அருகிலேயே பல மசூதிகளும் உள்ளன. இந்நிலையில், ஹசீனா அரசு கவிழ்ந்த பின்னர், இந்த கோவிலை பாதுகாப்பதற்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இதுபற்றி கோவிலின் முக்கிய பூசாரிகளில் ஒருவரான ஆஷிம் மைத்ரோ கூறும்போது, இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் வருகின்றனர். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லது புத்த மதத்தினர் என அனைத்து மனிதர்களுக்கும் அன்னையானவள் (கடவுள்) தாயாக இருக்கிறாள். அவர்கள் ஆறுதல், வளம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை பெறுவதற்காக வருகிறார்கள் என கூறியுள்ளார்.

இந்த கோவில் மத மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது என்றார். ஹசீனா இந்தியாவுக்கு சென்று தஞ்சமடைந்தபோது, கோவிலிலேயே இருந்தேன் என்றும் கோவிலுக்கு யாரும் வரவில்லை என்றும் கோவில் கதவுகள், நுழைவு வாசலை அடைத்து விட்டு கோவில் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளே இருந்தனர் என்றும் போலீசார் படையினர் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அப்போது, உள்ளூர் சமூக மக்கள் உதவியாக இருந்தனர். கோவிலுக்கு வெளியே இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பலர் பாதுகாப்புக்காக காவலுக்கு நின்றனர். இதனால், கோவிலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படவில்லை. அந்த நாளில் இருந்து இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறியதுடன், தடையின்றி தினமும் பிரசாதமும் வழங்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்