அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் நடந்தது என்ன...? நினைவுகூர்ந்த டிரம்ப்

அமெரிக்காவில் டிரம்ப் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு நடந்ததும், அவர் மீட்கப்பட்டு சொகுசு காரில் அமர வைக்கப்பட்டதும், தன்னுடைய கையை முழக்கமிடுவது போல் உயர்த்தி காட்டினார்.

Update: 2024-07-14 10:07 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சியும், முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சியும் இந்த தேர்தலில் கடும் போட்டியை சந்திக்கும் என பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்றார். அப்போது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், அமெரிக்காவின் உளவு அமைப்புக்கும், போலீசார் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

பேரணியில் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்த மற்றொரு நபரின் குடும்பத்தினருக்கும் என்னுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். நம்முடைய நாட்டில் இதுபோன்ற செயல்கள் நடைபெறும் என்பது நம்ப முடியாதது.

இந்த நேரத்தில், துப்பாக்கி சூடு நடத்தியவரை பற்றி எதுவும் எனக்கு தெரியவில்லை என பதிவிட்டு உள்ளார். துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், எனக்கு ஒரு சத்தம் கேட்டது. ஏதோ தவறாக நடக்கிறது என உடனடியாக எனக்கு தெரிந்தது. துப்பாக்கி குண்டு துளைத்து சென்றது என உணர்ந்தேன் என டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

அதன்பின்னர் அவர், அதிக அளவில் ரத்தம் கசிந்தது. அதனால், என்ன நடக்கிறது என நான் உணர்ந்தேன். கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும் என தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் நடந்ததும், அமெரிக்க உளவு பிரிவினர் அவரை மேடையில் இருந்து உடனடியாக பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்து சென்றனர். சொகுசு காரில் அமர்ந்ததும், டிரம்ப் தன்னுடைய கையை முழக்கமிடுவது போல் உயர்த்தி காட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்