காங்கோவில் பயங்கர விபத்து- நதியில் படகு மூழ்கி 86 பேர் பலி

நதியில் தத்தளித்த 185 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Update: 2024-06-12 10:52 GMT

கின்ஷாசா:

ஆப்பிரிக்க நாடான  காங்கோவின் மாய்-நிடோம்பே மாகாணத்தில், காங்கோ நதியின் கிளை நதிகளில் ஒன்றான குவா நதி பாய்கிறது. இந்த நதியில் நேற்று முன்தினம் இரவு மிகப்பெரிய படகு ஒன்று கவிழ்ந்து மூழ்கியது.

முஷீ நகரில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி வந்த படகு, லெடிபா கிராமத்தின் அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த அனைவரும் நதியில் விழுந்து தத்தளித்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர். மற்றவர்கள் நதியில் மூழ்கினர்.

இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று நதியில் தத்தளித்தவர்களை மீட்டனர். இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இன்று மாலை நிலவரப்படி 21 குழந்தைகள் உள்ளிட்ட 86 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை 185 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலரைக் காணவில்லை. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேசமயம் படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள்? என்ற உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்