ஒலியை விட 10 மடங்கு அதிவேகம்... உக்ரைனில் உக்கிரம் காட்டிய ரஷிய ஏவுகணை; 10 பேர் பலி
ரஷியாவிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும் என உக்ரைன் நாட்டின் விமான படை தெரிவித்து உள்ளது.
கீவ்,
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 2 ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். தூதரக அளவிலான பேச்சுவார்த்தை பலனளிக்காத சூழலில், போர் தொடருகிறது.
இந்நிலையில், கீவ் நகரில் ஆக்மத்தித் என்ற குழந்தைகள் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. உக்ரைனில் குழந்தைகளுக்கான மருத்துவ வசதி கொண்ட மிக பெரிய மருத்துவமனையாக இது உள்ளது. இதன் மீது ரஷியா இன்று திடீரென அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.
எனினும், இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. ஆனால், கீவ் நகரில் நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று, உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்த கிரிவி ரீ என்ற நகரத்தின் மீது நடந்த மற்றொரு தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு இது மிக பெரிய தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலில், கின்ஜால் என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ரஷியாவிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும் என உக்ரைன் நாட்டின் விமான படை தெரிவித்து உள்ளது.
இந்த கின்ஜால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்ல கூடிய திறன் வாய்ந்தவை. அதனால் இந்த வகை ஏவுகணைகளை தடுத்து மறிப்பது என்பது கடினம். இந்த தாக்குதல்களால், நகரத்தில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
இந்த தாக்குதல்கள் பற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, வெவ்வேறு வகையான 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், உக்ரைனின் 5 நகரங்கள் முக்கிய இலக்காக கொள்ளப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.