உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதி களை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தநிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கை - தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரையில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (10-12-2024) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நாளை (11-12-2024) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழைக்கும், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12-ந்தேதி திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.
13-ந்தேதி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
14-ந்தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.