புயல் காரணமாக கடலூரில் கடலில் கடும் சீற்றம் நிலவுகிறது. தானே புயலை நினைவுப்படுத்தும் வகையில் கடல் சீற்றம் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் ராயபுரம் சர்ச் பகுதியில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மரியதாஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 அடி உயரத்திற்கு மேலாக மழை நீர் சூழ்ந்துள்ளது.
பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க வாய்ப்பு
இன்று பிற்பகலில் புயல் கரையைக்கடக்கும் என கூறப்பட்ட நிலையில் மாலையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்று மாலை கரையைக்கடக்கிறது பெஞ்சல் புயல்
வேகமெடுக்கும் பெஞ்சல் புயல்
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
கும்பகோணம், திருவிடைமருதூரில் சாரல் மழை
தஞ்சை மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல் தி.மலை ,ஆரணி ,சேவூர், களம்பூர், ஆதனூர், மலையாம்பட்டு சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. விழுப்புரம், விக்கிரவாண்டி, வளவனூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
புயல் கரையை கடக்கும் இடம் மாற வாய்ப்பு
பெஞ்சல் புயல் கரையை கடக்கும் இடம் மாற வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார். 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் பெஞ்சல் புயலால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலையில் இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளித்துள்ள நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி, அடையாறு, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். நீர் தேங்கிய இடங்களில் சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது.
தரையிறங்கிய குவைத் விமானம்
சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த குவைத் விமானம் தரையிறங்கியது.
புயல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 3-ம் தேதி நடைபெறும் என்று மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.