கன மழை - விமான சேவை ரத்து
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரு, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், செங்குன்றம், சோழவரம் தலா 3 செமீ, பள்ளிப்பட்டு, பூவிருந்தவல்லி, பூண்டி தலா 2 செமீ மழை பதிவாகி உள்ளது.
சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அங்கங்கே வைக்கப்பட்டுள்ள ராட்ச பம்புகள் மூலமாக மழைநீர் உடனுக்குடன் அகற்றி வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
பெஞ்சல் புயலானது, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, 13 அடி வரை கடல் அலை எழுந்து கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
பெஞ்சல் புயல் அப்டேட்
பெஞ்சல் புயல் சென்னைக்கு 190 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மாமல்லபுரத்தில் மின்விநியோகம் நிறுத்தம்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. 3 துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நகர்ந்து வரும் புயல் மாமல்லபுரம் அருகே இன்று மதியம் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரத்தில் உள்ள மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை தந்துள்ளனர். மரக்காணத்தில் 350 தற்காலிக பாதுகாப்பு மையங்கள், 38 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை பணியில் தீயணைப்பு, வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி - பெரிய காலாப்பட்டில் புகுந்த கடல் நீர்
புதுச்சேரி: கடல் சீற்றம் காரணமாக பெரிய காலாப்பட்டு பகுதியில் கடல்நீர் புகுந்தது.
புயல் எச்சரிக்கை: மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்
பெஞ்சல் புயலின்போதும் மெட்ரோ ரெயில்கள் இன்று வழக்கம்போல் சனிக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 190 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 7 கி.மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையைக் கடக்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.