23ம் தேதி வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-20 07:15 GMT

கோப்புப்படம்

சென்னை,

மத்திய அந்தமான் கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்கக் கடலின் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 21-ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 20, 21, 24-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 22, 23, 25-ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை (அக்.21) கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கத்தார் பரிந்துரைத்த டாணா (DANA) என பெயரிடப்பட உள்ளது. இதன்படி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், இது ஓடிசா, மேற்குவங்காளம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்