தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படுமா..? - அமைச்சர் துரைமுருகன் பதில்
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார்.;

கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபையில் கேள்வி, பதில் நேரத்தில், தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதியாக உள்ளதாகவும், மழைக்காலங்களில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலக்கின்ற நிலையில், தாமிரபரணி ஆற்றில் 4, 5 இடங்களில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன், "தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது. நம்மிடம் இருக்கும் ஒரே வற்றாத நதி தாமிரபரணி தான். அத்தியாவசியமான கோரிக்கை உள்ள நிலையில் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்