குழந்தைகள் ஊட்டச்சத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது - அண்ணாமலை கேள்வி
பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
மீண்டும் ஒருமுறை, பள்ளிக் குழந்தைகளுக்கு, மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்கியிருக்கிறது திமுக அரசு. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது, தமிழகப் பள்ளிகளில் இது நிகழ்கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக மத்திய அரசு வழங்கும் நிதி, எங்கு செல்கிறது?
பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கு தரமற்ற முட்டைகள் கொடுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் பொறுப்பான முட்டை அமைச்சர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி, குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும். இனியும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், திமுக அரசுக்கு, பெற்றோர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அதில் பதிவிட்டுள்ளார்.