சிறை தண்டனையை எதிர்த்து ஹெச்.ராஜா மேல்முறையீடு: விரைவில் விசாரணை
பெரியார் சிலை, கனிமொழி அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஹெச். ராஜா மேல்முறையீடு செய்துள்ளார்.
சென்னை,
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டுவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இந்த புகாரில் ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு, மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எம்.பி,., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஹெச். ராஜா மீதான புகார்கள் காவல்துறை சார்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இரண்டு வழக்குகளிலும் தனித்தனியாக 6 மாதங்கள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டநிலையில் அது நிறுத்தி வைக்கப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. ஹெச்.ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாக கோர்ட்டு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்புகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஹெச்.ராஜா மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பான அந்த மனுவில், சம்பவம் நடந்து 5 மாதங்களுக்கு பின்னரே எனக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாருக்கான காலதாமதம் குறித்து விளக்கவில்லை. அதுவும் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்கவில்லை. மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேரடி சாட்சியங்களோ, ஆதாரங்காளோ இல்லாத நிலையில் எனக்கு சிறை தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மனுகள் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.