விஜய் மாநாடு: "தி.மு.க.வை தூக்கி எறிய இளைய சமுதாயம் தயாராகிவிட்டது.." - ஆர்.பி.உதயகுமார் கருத்து

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முதன்முதலாக செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2024-10-28 07:32 GMT

மதுரை,

தி.மு.க.வை தூக்கி எறிய இளைய சமுதாயம் தயாராகிவிட்டது என்பதுதான் விஜய் மாநாடு சொல்லும் செய்தி என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கமாக கிராண்ட் ஒப்பனாக அமைந்துள்ளது. இளைஞர் சமுதாயம் தி.மு.க.வை ஏற்றுக் கொள்ளவில்லை என விஜய்யின் மாநாட்டு வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது. விஜய்யின் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர். வாரிசு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரை சுட்டிக் காட்டி பேசியதை அ.தி.மு.க. வரவேற்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முதன்முதலாக செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

தி.மு.க.வை தமிழ்நாட்டு மக்கள் எதிர்கிறார்கள் என்பதற்கு தமிழக வெற்றிக் கழக மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது. சபரீசனை பார்க்காமல் தமிழகத்தில் யாரும் தொழில் தொடங்க முடியாத சூழல் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தால் அ.தி.மு.க.வுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை. ஆளும் கட்சிக்கு தான் தமிழக வெற்றிக் கழகம் பாதிப்பாக இருக்கும். தமிழக வெற்றிக் கழக கொள்கைகள் வரவேற்கத்தக்கது.

அ.தி.மு.க.வின் 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அ.தி.மு.க. மக்களின் நிரந்தர வாக்கு வங்கியை கொண்டுள்ளது. தி.மு.க.வில் இளவரசர் உதயநிதி ஸ்டாலினுக்கு மணிமகுடம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இளைஞர் சமுதாயம் கொதித்து போய் விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்