தமிழகத்தின் கடன் அளவு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயரும்; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழகத்தின் கடன் அளவு ரூ. 9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயரும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.;

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் கடன் அளவு ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியே 30 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவாக கடன் அளவு தொடர்பாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன.
2025-26-ம் ஆண்டில் மாநில அரசு ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 96 கோடியே 76 லட்சம் அளவுக்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், ரூ.55,844 கோடியே 53 லட்சம் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும்.
இதன் விளைவாக, அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 31-ந் தேதி அன்று நிலுவையில் உள்ள கடன் ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியே 30 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-26-ம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 26.07 சதவீதம் ஆகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன் விகிதம் 2026-27-ம் ஆண்டில் 25.49 சதவீதமாகவும், 2027-28-ம் ஆண்டில் 24.85 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சீரிய நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனை தக்கவைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.