வைகை ஆற்றில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
வைகை ஆற்றில் கேமரா பொருத்தி கண்காணித்து, குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை அறிவறுத்தியுள்ளது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா, கீழப்பசலை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். ஆதனூர் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது வைகை ஆற்றில் மழைநீர் வருகிறது. எனவே ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, ஆதனூர் கண்மாயில் தண்ணீரை நிரப்பி விவசாயத்தை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மதுரையில் ஓடும் வைகை ஆற்றின் கரையோரம், மாநகராட்சியினர் குப்பை தொட்டிகளை வைத்துள்ளனர். ஆனால் குடியிருப்போர், வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் ஆற்றில் தண்ணீர் செல்வது தடைபடுகிறது என்றார்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் அடிப்படை கடமை உள்ளது. வைகை ஆற்றில் வாகனங்களை கழுவுவது, குப்பை கொட்டுவதை அனைவரும் காண முடிகிறது. இதனை தடுக்க வைகை ஆற்றில் கேமரா பொருத்தி கண்காணித்து, குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் வைகை ஆற்றை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.