வெளிப்படைத்தன்மையுடன் அறிக்கை வழங்குக - எடப்பாடி பழனிசாமி

உட்கட்சி செயல்பாடுகள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் அறிக்கை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-11 07:53 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 'கள ஆய்வு' குழுவினரின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு..க தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு 'கள ஆய்வுக்குழு' ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கட்சியில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட வாரியாக, கிளை, வார்டு, வட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை இந்த குழு நேரடியாக ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உட்கட்சி செயல்பாடுகள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் அறிக்கை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. களஆய்வுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்றவேண்டும். மாவட்ட செயலாளர்கள் மீது தவறு இருந்தால்கூட, அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட செயலாளர்கள் மீது தவறு இருந்தால் ஆய்வு அறிக்கையை வைத்து அப்பகுதியில் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்.

அ.தி.மு.க. கள ஆய்வு குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையிலேயே புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு டிச.7-ந்தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் ஆய்வு செய்து கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என கூற வேண்டும். பாரபட்சம் பார்க்காது அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்