விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு
விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சென்னை,
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறைந்த விஜயகாந்த் உடலுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் சென்று அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் நினைவிடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்று அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்தது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிகவின் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி மாநில தேர்தல் அலுவலகத்தில் இருந்து பேரணி வர தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.