பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
காற்றழுத்தத் தாழ்வு நிலை நாளை கரையை கடக்க உள்ள நிலையில் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.;
ராமநாதபுரம்,
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலையில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளிலும், சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான அனுமதி சீட்டையும் மீன்வளத்துறையினர் ரத்து செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக இன்று இரண்டாவது நாளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.