தலைமறைவாய் இருந்து சவால் விடும் நித்தியானந்தா - நீதிபதி சரமாரி கேள்வி

நித்தியானந்தா நீதிமன்றத்துக்கு வருவதில்லை, ஆனால் அவரது சொத்துக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2024-10-22 13:21 GMT

மதுரை,

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுரேகா என்பவர் நித்தியானந்தாவின் சீடராக இருக்கிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், "கணேசன் என்பவருக்கு சொந்தமான விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக சுரேகா, தர்மலிங்கம் மற்றும் ரவி ஆகியோர் மீது தேனி மாவட்டம் சேத்தூர் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் நாங்கள் அது சம்பந்தமான எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.பொய்யான புகாரில் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எனது மனுதாரர் நிலத்தை அபகரிக்கும் எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு, ஆகவே அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். நிலத்தின் உரிமையாளர் கணேசன் ஏற்கனவே நித்தியானந்தா வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ளார். மைசூர் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நித்தியானந்தாவின் சீடர் கணேசனை பயமுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார். நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள், பிடிவாரண்டுகள் உள்ளன. நித்தியானந்தா நீதிமன்றத்துக்கு வருவதில்லை, ஆனால் அவரது சொத்துக்களை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் மனுதாரர் இனிமேல் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் நாளை தாக்கல் செய்தால் அவருக்கு முன் ஜாமீன் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்