புத்தாண்டு விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தமிழ்நாட்டில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.;
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. வடபழனி முருகன் கோவில் , மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் , திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், இன்று புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒக்கேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் அருவிகளின் அழகை ரசித்தபடி குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்றும் காவிரி ஆற்றை அவர்கள் கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.