மகளிர் சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை - தமிழக அரசு அழைப்பு

மகளிர் சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தைக்கு வருகை தருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2024-11-09 06:18 GMT

சென்னை,

இயற்கை சந்தைக்கு பொதுமக்கள் வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி மகிழ வேண்டும் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை (Natural Bazaar) நடைபெற்று வருகிறது.

இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஒலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் கிடைக்கும். மேலும் இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருட்கள் கிடைக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை சந்தைக்கு வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி மகிழ அன்புடன் அழைக்கின்றோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்