மன்மோகன் சிங் மறைவு: மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் 6 நாட்களுக்கு ரத்து
மன்மோகன் சிங் மறைவையொட்டி மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால சிற்பகலை சின்னங்கள் உள்ளன. இந்த புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நம் நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய விழாக்கள் உள்ளிட்டவை குறித்து அறிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த பயணிகளுக்காக தமிழக சுற்றுலாத்துறை டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடத்துகிறது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் ஒரு மாத காலத்திற்கு நடத்தப்படும் விழாவில் தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நாட்டியங்கள், கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான நாட்டிய விழா கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கி, ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவையொட்டி அவருக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு அரசுநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் நேற்று முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை 6 நாட்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 2-ந்தேதி முதல்ஜனவரி 20-ந்தேதி வரை வழக்கம் போல் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் றடைபெறும் என்று மாமல்லபுரம் சுற்றுலாத்துறை நிர்வாகம் அறிவி்த்துள்ளது.