கார்த்திகை மாத பிறப்பு எதிரொலி; தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்தது
கார்த்திகை மாதம் பிறந்த நிலையில், தூத்துக்குடியில் இன்று மீன்கள் விலை குறைந்தது.
தூத்துக்குடி,
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்றைய தினம் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதன் எதிரொலியாக தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைந்தது. ஏற்கனவே மழையால் குறைவாகவே நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வரும் நிலையில், தற்போது மீன்களின் விலையும் கணிசமாக குறைந்தது.
வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சீலா மீன்கள் இன்று ஒரு கிலோ 800 ரூபாய் வரை விற்பனையானது. 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் விளைமீன் 350 ரூபாய்க்கும், ஊளி மீன், பாறை மீன் உள்ளிட்டவை 300 ரூபாய்க்கும் விற்பனையானது. அதே போல் சாளை மீன் ஒரு கூடை 700 ரூபாய் வரையிலும், வங்கனை ஒரு கூடை ஆயிரம் ரூபாய் வரையிலும், வாளை மீன் கிலோ 120 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டது.