அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வதா? - டி.டி.வி.தினகரன் கண்டனம்
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
விழுப்புரம், கடலூரில் பெஞ்சல் புயல் நிவாரணத் தொகையை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வது கடும் கண்டனத்திற்குரியது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்ப அட்டை அடிப்படையில் தமிழக அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையை வழங்கக் கோரி இரண்டாவது நாளாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எந்தவித முன்னறிவிப்புமின்றி திறக்கப்பட்ட சாத்தனூர் அணையாலும், இரவு பகலாக தொடர்ந்து பெய்த கனமழையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத் தொகையை கூட வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் வீடுகளையும், உடமைகளையும் இழந்து பரிதவித்து வரும் மக்களை, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் வீதிக்கு வந்து போராடும் சூழலை ஏற்படுத்தியிருப்பது திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
எனவே, அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வதை நிறுத்திவிட்டு, அறிவித்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.