உதயநிதி தலைமை தாங்கிய நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: தி.மு.க. அரசின் நாடகம் அம்பலம் - டி.டி.வி.தினகரன்

முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-10-25 08:14 GMT

கோப்புப்படம் 

சென்னை,

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. கவர்னருக்கு எதிராக கொந்தளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னைத் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதல்-அமைச்சரும், கவர்னரின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதல்-அமைச்சரும் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

துணை முதல்-அமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் தி.மு.க. அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்